வங்கதேசத்திற்கான கப்பல் போக்குவரத்து உரிமைகளை ரத்து செய்த இந்தியா

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், சீனாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருந்தபோது வடகிழக்கு இந்தியா நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்கு வங்கதேசம் தான் கடல் வழியின் “ஒரே பாதுகாவலர்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு இந்தியாவில் சீனாவின் பொருளாதாரப் பங்களிப்பை பங்களாதேஷ் ஆதரித்தது போல் தோன்றிய நிலையில், பங்களாதேஷின் ஏற்றுமதி சரக்குகளுக்கான போக்குவரத்து வசதியை புதுடெல்லி நிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் உடனான பங்களாதேஷின் வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கையில், “பங்களாதேஷிலிருந்து மூன்றாம் நாடுகளுக்கு நில சுங்க நிலையங்கள் (LCSs) வழியாக கொள்கலன்கள் அல்லது மூடப்பட்ட லாரிகளில் துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்களுக்கு ஏற்றுமதி சரக்குகளை அனுப்புவது” தொடர்பான ஜூன் 29, 2020 தேதியிட்ட தனது முந்தைய சுற்றறிக்கையை ரத்து செய்வதாக சி.பி.ஐ.சி (CBIC) தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டின் சுற்றறிக்கை, பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு பங்களாதேஷின் ஏற்றுமதி சரக்குகள் தடையின்றி செல்ல உதவும் வகையில், இந்திய நில சுங்க நிலையங்கள் வழியாக இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்றுமதி சரக்குகளை கொண்டு செல்ல அனுமதித்தது.