இந்தியா – கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ‘பெஸ்ட்’பேருந்து: 6 பேர் பலி, 43 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 9) இரவு நிகழ்ந்த மோசமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.குர்லா வெஸ்ட் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று ஏராளமான வாகனங்கள் மீதும் சாலை ஓரம் நடந்து சென்றவர்கள் மீதும் மோதியதாக மும்பை காவல்துறை தெரிவித்தது.
குர்லா பகுதியில் இருந்து அந்தேரி பகுதியை நோக்கி, பெஸ்ட் (BEST) நிறுவனத்தைச் சேர்ந்த அந்த மின்சாரப் பேருந்து சென்றுகொண்டு இருந்தது.அப்போது பெண்கள், குழந்தைகள் என பலரும் பேருந்தில் இருந்தனர்.
அம்பேத்கர் நகர் என்ற பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாகப் பேருந்து தறிகெட்டு ஓடியது. அதிவேகத்தில் சென்ற பேருந்து நடந்து சென்றவர்கள் மீது மோதியது.அப்போதும், வேகம் குறையாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட 30 முதல் 40 வரையிலான வாகனங்களைப் பேருந்து இடித்துத் தள்ளியது. பின்னர் அங்குள்ள குடியிருப்பு வளாகம் மீது மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) காலை அந்த எண்ணிக்கை 6ஆக அதிகரித்தது.காயமடைந்தோர் எண்ணிக்கையும் 25லிருந்து 42ஆக அதிகரித்தது.
விபத்து குறித்து காவல்துறை துணை ஆணையர் கணேஷ் காவ்டே கூறுகையில், “விபத்தில் ஆறு பேர் பலியாகிவிட்டனர். படுகாயம் அடைந்த 45க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.சஞ்சய் மொரே என்னும் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது என்றார்.
பேருந்தின் நிறுத்துவிசை (பிரேக்) பழுதடைந்ததே விபத்துக்குக் காரணம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நிறுத்துவிசை இயங்காததால் பீதியடைந்த ஓட்டுநர், வேகவிசையை (ஆக்சிலேட்டர) தவறுதலாக மிதித்ததாகவும் அதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கண்டபடி ஓடி வாகனங்கள் மீதும் பாதசாரிகள் மீதும் மோதியதாகவும் காவல்துறை கூறியது.