சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய இந்தியா!
கடந்த ஜூலை மாதம் 20- ஆம் திகதி பாஸ்மதி அரசி வகைகள் அல்லாத இதர அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா உடனடியாக தடைவிதித்தது.
இதனால், சிங்கப்பூர், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டத் தடைக் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய உணவுத் துறை அமைச்சகம், ” உள்ளூர் சந்தைகளில் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், போதிய அளவு அரிசி இருப்பு உள்ளதை உறுதிச் செய்யவும், பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்திய நிறுவனங்களிடம் புழுங்கல் மற்றும் இட்லி அரிசிகளை, சிங்கப்பூர் அதிகளவில் இறக்குமதி செய்து வந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி தடையால் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து, சிங்கப்பூர் உணவுக் கழகத்தின் அதிகாரிகள், இந்திய அரசு அதிகாரிகளிடம் தங்கள் நாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி (Arindam Bagchi) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா – சிங்கப்பூர் இடையேயான பொருளாதாரம், மக்கள் தொடர்பு, சூழ்நிலை என பலவற்றில் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
அதன் காரணமாக சிங்கப்பூர் நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா சிறப்பு அனுமதியை அளிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு, முறைப்படி விரைவில் வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அறிவிப்பின் மூலம் சிங்கப்பூரில் அரிசியின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.