இந்தியா – செங்கோட்டைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற 5 வங்கதேச குடியேறிகள் கைது

புதுடெல்லியின் செங்கோட்டைக்குள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) நுழைய முயன்ற பங்ளாதேஷைச் சேர்ந்த ஐவரை இந்திய வேவுத் துறை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
அவர்கள் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று வேவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். செங்கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பங்ளாதேஷ் நாட்டவரைத் தடுத்துநிறுத்தினர்.
“சந்தேகத்திற்குரிய நபர்கள் செங்கோட்டை வட்டாரத்திற்குள் நுழைய முயன்றனர். தடுத்துநிறுத்தி விசாரித்ததில் அவர்கள் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் புதுடெல்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதும் தெரியவந்தன,” என்றார் மூத்த அதிகாரி.
அவர்கள் அனைவரும் மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பு எந்த முறையான அனுமதியும் பெறாமல் இந்தியாவுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி சொன்னார்.
சந்தேக நபர்கள் ஐவரும் புதுடெல்லியில் தொழிலாளிகளாக இருக்கின்றனர். அவர்களிடம் பங்ளாதேஷ் ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.
இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம். அதனால் செங்கோட்டையிலும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குறித்து வெளிநாட்டு வட்டாரப் பதிவு அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சட்டப்படி நாடு கடத்தப்படுவார்கள்.