சுதந்திர தின ஒத்திகை – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்
78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வுபெற்ற) தெரிவித்துள்ளார்.
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் முப்படையைச் சேர்ந்த 234 அதிகாரிகளும், 3323 ஏனைய தரப்பினரும், தேசிய மாணவர் படையணியின் 12 அதிகாரிகளும் மற்றும் 479 மாணவர் படையினரும் பங்கேற்கவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியின் போது முப்படையினரின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், இந்த மரியாதை அணிவகுப்பு பெருமையுடன் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு இணையாக, கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி 12 அதிகாரிகள் மற்றும் 82 ஏனைய தரப்பினரின் பங்கேற்புடன் காலி முகத்திடலில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன.
மேலும், விமானப்படையின் மூன்று பெல் (Bell) ரக ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடியை ஏந்தியவாறு வான்வழி சாகசங்கள் நிகழ்த்தப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு Clean Sri Lanka திட்டத்தை மையமாகக் கொண்டு முப்படையினரால் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தின ஒத்திகை அணிவகுப்புகள் ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதால், அந்த நாட்களில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.





