சீனாவில் ரூ.9 லட்சம் பரிசுக்கு ஆசைப்பட்டு குடித்தே உயிரை விட்ட ஊழியர்..!
சீனாவில் 9லட்சம் ரூபாய் பரிசு பணத்திற்கு ஆசைப்பட்டு அலுவலக விருந்தில், ஒரு லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வித்தியாசமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குவது சீனர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் சென்ஷன் நகரில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் சீனா மட்டுமின்றி உலகம் மட்டும் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த யாங் என்ற நிறுவன உரிமையாளர் தனது ஊழியர்களுக்காக மது விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஜாங் என்ற ஊழியரும் கலந்து கொண்டு மது அருந்தி உள்ளார்.
மது போதையில் இருந்த ஜாங், தன்னைவிட யாராவது அதிகமாக மது குடித்தால் 5 ஆயிரம் யுவான் தர தயாராக இருப்பதாக அறிவித்தார். அதற்கு யாரும் பதிலளிக்காத நிலையில் அதை பத்தாயிரம் யுவானாக அதிகரித்தார். அப்போதும் யாரும் வராத நிலையில் நிறுவனத்தின் உரிமையாளரான யாங், ஜாங் வெற்றி பெற்றால் அவருக்கு 20 ஆயிரம் யுவான் வழங்குவதாக அறிவித்தார். இது இலங்கை மதிப்பில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் ஆகும்.
இந்தப் போட்டியில் ஜாங் தோற்றுவிட்டால் மொத்த நிறுவன ஊழியர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்க பத்தாயிரம் யுவான்களை கொடுக்க வேண்டும் எனவும் யாங் நிபந்தனை விதித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் ஜாங்கிற்க்கு எதிராக சில ஊழியர்களையும், அவரது சொந்த கார் ஓட்டுனரையும் யாங் களமிறக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், 30 சதவீதம் முதல் 60 சதவீதம் ஆல்கஹால் உள்ள பைஜூ என்கிற மதுபானத்தை, வெறும் 10 நிமிடத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு ஜாங் குடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் நிலைகுலைந்து விழுந்த அவரை உடனடியாக உடன் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், மூச்சு திணறல், நிமோனியா, காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சென்ஷன் பொலிஸார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.