இம்ரான் கைது விவகாரம் : பாகிஸ்தானில் மூன்று ஜெனரல் அதிகாரிகள் பதவிநீக்கம்!
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ராணுவச் சொத்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக மூன்று அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு லெப்டினன்ட் ஜெனரல் உட்பட மூன்று மூத்த அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் பணி நீக்கம் செய்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
உள்ளக விசாரணை மற்றும் அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 102 பேர் விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மேஜர் ஜெனரல் அஹ்மத் ஷெரீப் சவுத்ரி தெரிவித்தார்.
அவர்களில் எத்தனை பேர் சிவிலியன்கள் அல்லது இராணுவ அதிகாரிகள் என்பது பற்றிய விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகளின் பெயரையும் அவர் கூற மறுத்துவிட்டார்.