தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதுடில்லியில் முக்கிய கூட்டம்!
இலங்கை உட்பட ஆசியாவில் மிக முக்கிய நாடுகளின் பங்கேற்புடன் புதுடில்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு நடைபெறுகின்றது.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுகின்றது.
இலங்கை, இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ் மற்றும் மொறிசியஸ் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இக்கூட்டத்துக்கு மலேசியா விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் உறுப்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டு நடத்தப்படும் 7 ஆவது கூட்டம் இதுவாகும்.





