இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளிநாட்டு வேலைக்காகச் செல்லவிருக்கும் குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கான புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
2-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களின் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் விண்ணப்பங்களை அவர்களது பகுதி கிராம சேவகர் அதிகாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி மூலம் சான்றளித்து, அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகள் குறித்த பாதுகாவலர்களின் உத்தரவாத ஆவணங்களைப் பெற்றால் மட்டுமே DS4 ஆவணம் வழங்கப்படும்.
குழந்தைகள் இல்லாத பெண்கள், தமக்கு குழந்தைகள் இல்லை என்ற ஆவணத்தை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் பிள்ளைகளின் பொறுப்புகள் பற்றிய ஆவணங்கள் 09 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என SLBFE தெரிவித்துள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் பல்வேறு மறு நுழைவு விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று SLBFE மேலும் தெரிவித்துள்ளது.
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.