உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியத்துவம்
உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, நமது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக இருக்க முடியும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மூளை. மருத்துவ அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும்போதிலும் மனிதனின் மூளைக்குள் பொதிந்திருக்கும் ரகசியங்களையுளும், அதன் சிக்கல்களையும் இது வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது.
மூளையின் முக்கியத்துவம்
மூளையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தான், இயற்கை மூளையை பாதுகாப்பாக மண்டை ஓட்டிற்குள் இருக்குமாறு படைத்திருக்கிறதோ என்னவோ. பிறக்கும்போது குழந்தையின் மூளையின் எடை சுமார் 300 கிராம் தான் இருக்குமாம். பிறந்ததில் இருந்தே வளர்ந்து வரும் மூளையின் வளர்ச்சி என்பது 18 வயதில் நின்றுவிடும். சராசரியாக வளர்ந்த ஒரு ஆணின் மூளை ஒன்றரை கிலோ எடையுடன் இருக்கும். பெண்ணின் மூளை சுமார் 1100 முதல் 1300 கிராம் வரை இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எண்ணங்களையும் தகவல்களையும் ஸ்டோர் செய்யும் மூளை
மனிதனாக பிறக்கும் எல்லோருக்கும் மூளையின் அமைப்பு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் அது செயல்படும் விதம்தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. அதை வைத்துத்தான் ஒருவர் புத்திசாலியா அறிவாளியா என்பது மதிப்பிடப்படுகிறது. மூளை சிறப்பாக செயல்பட்டால் ஒருவர் அறிவாளி என்று கண்டறியப்படுகிறார். அதாவது தினமும் நடக்கும் பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகளையும், நாம் படித்து அறியும் தகவல்களையும், இன்னும் பிற பல்வேறு விஷயங்களையும், நமது மூளை உள்வாங்கி அதை நினைவில் வைத்துக் கொள்கிறது.
மூளையில் உள்ள பகுதிகள்
மூளையில் பெருமூளை, நடுமூளை மற்றும் சிறுமூளை ஆகிய பகுதிகள் உள்ளன. உடலுக்கு கட்டளையிடும் பெரும்பாலான பணிகளை பெருமூளை மற்றும் சிறு மூளையே செய்கிறது. பெருமூளை என்பது மண்டையின் முன் பகுதியில் தெரியாளவில் இருக்கும். சிறுமூளை என்பது பின் தலையில் சிறிய அளவில் இருக்கும். உள்ள வலது இடது என இரு பகுதிகளில் 90 சதவீத கட்டளைகளை வழங்குவது இடது பாகம்தான். பேசுவது சிரிப்பது நடப்பது, அழுவது என எல்லா உறுப்புகளுக்கும் கட்டளையிடுவது இடது பாகம்தான்.
மூளை செயல்படும் விதம்
மூளைக்குள் பல நூறு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொரு நியூரானும் சுமார் 10,000 இணைப்புகளைக் கொண்டவை என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா… இந்த இணைப்புகள் மூலமாகத்தான் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் இன்னைக்கு நரம்பு மண்டலத்தை அது தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. மூளையின் செயல்பாட்டை (Brain Health Tips) விளக்க வேண்டும் என்றால், நம்மை நோக்கி தூக்கி எறியப்படும் பந்தை நாம் பிடிக்கும் செயலை வைத்து விவரிக்கலாம். ஒரு பந்து நம்மை நோக்கி வரும்போது, நமது கண் அந்த பந்து எவ்வளவு வேகத்தில் வருகிறது, எந்த இடத்தில் அது விழும் என்று நொடிப் பொழுதில் கணக்கிடுகிறது. அதே நேரத்தில் நமது கையையும் எந்த இடத்தில் கொண்டு சென்றால் அந்த பந்தை பிடிக்க முடியும் என்று உணர்த்தி நமது கைக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது மூளை தான்.
சிறு அதிர்ச்சிகளை கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மென்மையானது மூளை
நமது மூளை சிறு அதிர்ச்சிகளை கூட தாங்க முடியாத அளவுக்கு மிகவும் மென்மையானது. அதனால் தான் நான் கீழே விழுந்து தலையில் அடிபட்டாலோ, அல்லது தலையில் பலமான காயம் ஏதும் ஏற்பட்டாலோ நாம் கவனமாக இருக்க வேண்டும். வேலைப்பளு காரணமாக, சரியாக பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், நாம் நார்மலாக தானே இருக்கிறோம் என்று அலட்சியம் காட்டினால் பின்னர் பாதிப்பு பெரிதாக இருக்கும்.
உயர் ரத்த அழுத்தமும் மூளை ஆரோக்கியமும்
உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படாமல் இருந்தால் அது மூளை ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். ரத்த அழுத்தத்தால் மூளை நரம்புகள் வெடித்து ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு. அந்த நரம்பு பாதிப்புகள் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். உதாரணத்திற்கு கைகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளுக்கு அருகில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் கைகள் செயல் இழந்து போய் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உண்டு. அதே சமயம் உடலில் கொழுப்பு அதிகமாகி இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தினாலும் பக்கவாதம் ஏற்படலாம்.
மூளை ஆரோக்கியமும் தூக்கமும்
மூளையும் கணினி போல் தான் செயல்படுகிறது. எனவே ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக அதற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால் அதுவும் சோர்வாகிவிடும். அதனால் மூளைக்கு ஓய்வு கொடுத்து, கணினியை ரீஸ்டார்ட் செய்வதை போல, நன்றாக தூங்கி பின்னர் அதனை ரீஸ்டார்ட் செய்தால், புத்துணர்ச்சியுடன் அது மீண்டும் முழு வீச்சில் செயல்படும்.