அச்சுறுத்தலையும் மீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வாளர்கள்…பிரதமர் ரிஷிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலையும் மீறி, கடந்த 4 மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மிக விரைவில் அமுலுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 2 சிறு ரப்பர் படகுகளில் டசின் கணக்கானோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலானோர் ஆண்கள் என்றே கூறப்படுகிறது. அவர்களை டோவரில் மீட்டு பிரிட்டிஷ் எல்லைப் படைக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. புலம்பெயர் மக்களின் இந்த வருகை, பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ரிஷி சுனக், சட்டவிரோத புலபெயர் மக்களின் எண்ணிக்கை மற்றும் சிறு படகுகளின் வருகையை மொத்தமாக கட்டுப்படுத்துவார் என்றே உறுதி அளித்திருந்தார்.
கடந்த 4 மாதங்களில் சிறிய படகுகள் மூலம் இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். பலர் போர் அல்லது பஞ்சத்தில் இருந்து தப்பி ஐரோப்பா வழியாக பயணித்து பிரித்தானியாவுக்குள் நுழைகின்றனர்.இதுபோன்ற சட்டவிரோத நுழைதல், ருவாண்டா திட்டத்தால் கட்டுப்படுத்த முடியும் என்றே ரிஷி சுனக் நம்புகிறார்.
அடுத்த 9 முதல் 11 மாதங்களில் ருவாண்டா திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றே அரசாங்கம் நம்புகிறது.