‘தண்ணீர் இல்லையேல் உணவு இல்லை’ – நடிகை கஸ்தூரி காட்டம்
காவிரி பிரச்சனை விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு உணவுபொருள்கள் அனுப்பக்கூடாது என நடிகை கஸ்தூரி காட்டமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு கர்நாடகாவை வலியுறுத்தியது.ஆனால், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் திறந்து விட முடியாதென்று கர்நாடகா திட்டவட்டமாக கூறியது.
இந்த பிரச்சனை தொடர்பாக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்களும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், கர்நாடகாவிற்கு எதிராக நடிகை கஸ்தூரி கண்டனங்களை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, “வரலாற்றுப்படி காவிரியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு முழு உரிமை உள்ளது. அதில், தமிழகத்திற்கு மட்டும் 75 சதவீத உரிமை உள்ளது.
காவிரி தனி சொத்து என்று கர்நாடகா அமைச்சர்கள் நம்மை நம்ப வைக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு மின்சாரம், உணவு பொருட்கள் போன்றவற்றை அனுப்பக்கூடாது” என பேசினார்.