இந்தியாவில் ஆட மறுக்கும் பங்களாதேஷ் அணிக்கு ICC காலக்கெடு விதிப்பு!
டி-20 T-20 உலகக்கிண்ண தொடர் தொடர்பில் முடிவெடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நாளைவரை (21) ஐ.சி.சி. ICC காலக்கெடு வித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கிண்ண தொடர்பில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்காகவே இவ்வாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதிக்குள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தீர்மானமொன்றை எடுக்காவிடின் வேறு அணி சேர்க்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7-ம் திகதி முதல் இந்தியா மற்றும் இலங்கைஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது.
இந்தத் தொடரில் பங்களாதேஷ் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பங்களாதேஷ் அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறவுள்ளன.
எனினும், இந்தியாவில் ஆடுவதற்கு பங்களாதேஷ் அணி மறுப்பு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் இந்துக்கள்மீதான தாக்குதல் அதிகரித்துவருவதால் இந்தியா மற்றும் அந்நாட்டுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆண்டு இந்திய அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.மேலும் பங்களாதேஷ் மகளிர் அணியின் இந்திய வருகையும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸ{ர் ரஹ்மானை வாங்கியிருந்தது.
எனினும், பிசிசிஐ-யின் அறிவுறுத்தல் காரணமாக அவரை, கொல்கத்தா அணி விடுவித்தது. இதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து ” இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது . எனவே, டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும்.” என ஐசிசி-யிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்தது.
ஆனால் பங்களாதேஷின் குற்றச்சாட்டு மீது எந்தவித உண்மையும் இல்லை. அந்நாட்டு அணிக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஐசிசி தெரிவித்தது.
இதையடுத்து 2 பேர் அடங்கிய ஐசிசி குழு கடந்த சனிக்கிழமை டாக்கா சென்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை; தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தது.
இந்தியாவில் பங்களாதேஷ் விளையாட வேண்டும் என்ற முடிவில் ஐ.சி.சியும் உறுதியாக உள்ளது.
இந்நிலையிலேயே நாளை தினத்துக்குள் முடிவை அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலவேளை டி 20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி பங்கேற்காவிட்டால் அந்த அணிக்கு மாற்றாக தகுதிச் சுற்றில் பங்கேற்ற அணிகளில் சிறந்த தரவரிசையில் உள்ள ஸ்காட்லாந்து அணி விளையாடக்கூடும்.





