ஆஸ்திரேலிய விரைவுச்சாலையில் விழுந்த உலோகக் கழிவுகலால் சேதமடைந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆக பரபரப்பான விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (மே 2) காலை கனரக வாகனத்திலிருந்து 750 கிலோகிராம் எடைகொண்ட கூர்மையான இரும்புச் சிதைவுகள் விழுந்ததில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.
நகரத்தை நோக்கிச் செல்லும் சாலைத் தடம் மூடப்பட்டதோடு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எம்1 பசிபிக் விரைவுச்சாலையில் அதிகாலை சம்பவம் நடந்ததாகச் சொன்ன நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, 300க்கும் அதிகமான வாகனங்களின் சக்கரங்கள் சேதமடைந்ததாகக் கூறியது.
சாலையில் விழுந்த இரும்புச் சிதைவுகளை அவசரச் சேவை ஊழியர்கள் சுத்தம் செய்வதால் விரைவுச்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது. விரைவுச்சாலை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்ப பல மணி நேரம் ஆகலாம் என்றும் மாநில விரைவுச்சாலை கண்காணிப்பு அதிகாரி கூறினார்.
“இது, துடைப்பத்தைக் கொண்டு சாலையைக் கூட்டுவது போன்ற சாதாரண வேலை அல்ல. இரும்பை அடையாளங்காணும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. துப்புரவுப் பணிகளுக்கு நீண்ட நேரம் எடுக்கலாம்,” என்றார் அவர்.
இரும்புச் சிதைவுகள் சாலையில் விழுந்தது கண்டறியப்படும் முன் கனரக வாகனம் 30 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்றுவிட்டது. 46 வயது கனரக வாகன ஓட்டுநர் அதிகாரிகளின் விசாரணையில் உதவிவருகிறார்.
வாகனத்தை நடத்தும் நிறுவனமான என்ஜெ எஷ்டன் (NJ Ashton), விபத்துக்கு மன்னிப்புக் கேட்டதோடு துப்புரவுப் பணிகளில் உதவுவதாகச் சொன்னது.
“இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை,” என்ற நிறுவனம், விபத்துக்கு முழுமையாகப் பொறுப்பேற்பதாகக் கூறியது.