சீனாவில் உணவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் பற்கள் – அதிர்ச்சியில் மக்கள்

சீனாவில் விற்கப்பட்ட சொசேஜ் (sausage) எனப்படும் இறைச்சி உருளைகள் மற்றும் சில உணவு வகைகளில் மனிதப் பற்கள் காணப்பட்ட சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் உணவுப் பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என South China Morning Post தெரிவித்துள்ளது.
இம்மாதம் 13ஆம் திகதி, ஜீலின் (Jilin) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது பிள்ளைக்காக வீதியோர கடையிலிருந்து வாங்கிய இறைச்சி உருளையில் 3 செயற்கைப் பற்களைக் கண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடை உரிமையாளர் இந்த குற்றச்சாட்டை முதலில் மறுத்தாலும், விசாரணையின்போது தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இறைச்சி உருளைகள் மட்டுமின்றி, டிம் சம் (dim sum), கேக் (cake) போன்ற உணவு வகைகளிலும் மனிதப் பற்கள் காணப்பட்டதாக South China Morning Post குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இணையவாசிகள் இச்சம்பவங்கள் குறித்து அதிர்ச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உணவுப் பாதுகாப்பின் தரம் குறைந்து வருவது குறித்து பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.