வேகமாக எடை குறைய நடப்பது எப்படி?

இன்றைய அவசர உலகில் உடல் பருமன் பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதும், உடல் செயல்பாடற்ற நிலையும், உடல் எடையை வேகமாக அதிகரிக்கச்செய்கின்றன.
மக்கள் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதும் ஒன்று.
5-4-5 Walking Formula: 5-4-5 நடைபயிற்சி சூத்திரம்
சமீப காலமாக எடை இழப்புக்கான 5-4-5 நடைப்பயிற்சி சூத்திரமும் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பல சிறந்த ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த 5-4-5 நடைப்பயிற்சி ஃபார்முலா இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் பருமனைக் குறைத்து, மன அழுத்தத்தையும் சரி செய்வதாக பல சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
5-4-5 நடைபயிற்சி சூத்திரம் என்றால் என்ன? இதை எப்படி செய்வது? இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இவை அனைத்தைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
5-4-5 நடைபயிற்சி சூத்திரம் என்றால் என்ன?
5 நிமிட ஓட்டம்
இந்த வழக்கம் 5 நிமிட ஓட்டத்துடன் தொடங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது இதயத் துடிப்பை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. 5 நிமிட ஓட்டம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இது நுரையீரல் திறனையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலுக்கு நல்ல திடம் கிடைப்பதோடு தசைகளும் பலப்படுகின்றன.
5 நிமிட நடை
ஐந்து நிமிடங்கள் ஓடிய பிறகு, அடுத்த படி, 4 நிமிடங்கள் நடப்பது. இது சுவாசத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தசை சோர்வைக் குறைக்கிறது. மேலும் இது அடுத்த கட்டத்திற்கு தேவையான தளர்வை வழங்குகிறது.
5 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி
அதன் அடுத்த கட்டத்தில், 5 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். இது உடல் உறுதியை மேம்படுத்தவும், கால் தசைகளை வலுப்படுத்தவும், இருதய செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். விறுவிறுப்பான நடைபயிற்சி மிக முக்கியமானது என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் இது நிதானமான வேகத்தில் நடப்பதை விட அதிக கலோரிகளை எரிக்கிறது. மேலும் விரைவான நடை வேகமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
5-4-5 நடைபயிற்சி சூத்திரம்: இதற்கான சரியான வழி என்ன?
நிபுணர்களின் கூற்றுப்படி, 5-4-5 நடைப்பயிற்சி சூத்திரத்தை குறைந்தது மூன்று முறை, அதாவது சுமார் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஆனால், முடியாதவர்கள் 2 முறை அதாவது 30 நிமிடங்கள் செய்தாலும் போதும். இதற்கு, ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையில் தொடங்கி படிப்படியாக நேரத்தை அதிகரிப்பது சிறந்த வழியாக இருக்கும்.