உச்சம் தொட்ட வீட்டு வாடகை ;அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளது.அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து மக்கள் வருவதைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதால் வீட்டு வாடகைகள் புதிய உச்சத்தைத் தொடுகின்றன.2025ஆம் ஆண்டு 270,000 அனைத்துலக மாணவர்களுக்கு மட்டும் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 காலகட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. உள்ளூர் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன. அது 2023ஆம் ஆண்டிலிருந்து குறைக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் தற்போது வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 10சதவீதம் அதிகமாகவுள்ளது என்றும் தனியார் பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இனி ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் ஆண்டிற்கு 145,000 அனைத்துலக மாணவர்கள் சேர்க்க வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. பயிற்சி நிலையங்களில் 95,000 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக மாணவர்கள் சேர்க்கை குறித்து பல்கலைக்கழகங்களிடம் விரிவாக பேசப்படும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைத்தது குறித்து சில பல்கலைக்கழகங்கள் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியப் பொருளியலுக்கு பெரும்பங்கு ஆற்றுகின்றனர். 2022-2023ஆம் ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிட்டத்தட்ட 32 பில்லியன் வெள்ளி வருமானம் கிடைத்தது.
இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்குள் அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் வருவது வேலைவாய்ப்பு, வீட்டு வாடகை உள்ளிட்டவற்றில் தங்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்படுவதாக ஆஸ்திரேலிய குடிமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்