ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்ட இதுவரை இல்லாத மிகப்பெரிய பணமோசடி கும்பல்
ஹொங்கொங் சுங்க அதிகாரிகள், நாட்டின் மிகப்பெரிய பணமோசடி வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்துள்ளனர்,
இதில் சுமார் 14 பில்லியன் ஹொங்கொங் டொலர்கள் இந்தியாவில் நடந்த ஒரு மோசடி சம்பவங்களுடன் தொடர்புடையது.
குறித்த கும்பல் இதுவரையில் 14 பில்லியன் ஹொங்கொங் டொலர்களை பணத்தூய்மையாக்கல் செய்துள்ளனர்.
இதுவே அந்நாட்டில் நடந்த ஆக பெரிய பணமோசடி எனவும் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் பெண்கள், இருவர் ஆண்கள் என்றும் அவர்கள் அனைவரும் 23 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஹொங்கொங் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு கணக்கு ஒருமுறை ஒரே நாளில் 100 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், எழுவரில் ஒருவர் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது என அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் ஹொங்கொங் குடியிருப்புவாசிகள் என்பதை மட்டும் அவர்கள் கூறினர்.
அவர்களிடமிருந்து பல மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துகளை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் இணைய மோசடிகள், மின்னணு பொருள்கள் மற்றும் வைரம் உள்ளிட்ட அரிய ரத்தினங்களைச் சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்தல் போன்ற மோசடிகளில் இக்கும்பல் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.
மொத்தத்தில் 2.9 பில்லியன் டொலர்கள் இந்தியாவில் கையடக்க தொலைபேசி செயலி தொடர்பான மோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக சுங்க நிதி விசாரணைப் பணியகத்தின் தலைவர் Ip Tung-ching தெரிவித்தார்.
விசாரணைத் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், எழுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.