இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் முகம் பொலிவு பெற இதோ சில டிப்ஸ்!
வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே முகம், சருமம் போன்றவற்றை மென்மையாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில டிப்ஸ் இதோ:
நாட்டுக் கற்றாழையின் ஜெல்லி பகுதியுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து குழைத்து அதை முகம், கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும். இப்படி செய்வதால் ஒரு வித ஃப்ரஷ் தன்மையை முகம் பெற்றிருப்பதைக் காணலாம்.
கடல்பாசி, முல்தானி மிட்டி, ரோஸ் வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து கை, கால், முகம் போன்ற இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருக்கும்.
அதிமதுர சக்கையுடன் சிறிதளவு குங்குமப்பூ, பால் விட்டு நன்றாக அரைத்த கலவையை முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி பளபளப்பு கிடைக்கும்.
பப்பாளி, வாழைப்பழம் இரண்டையும் சமஅளவு எடுத்து, தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு பிசைந்து இதை சருமத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ ஃப்ரஷ் லுக் கிடைக்கும்.
கோதுமைமாவுடன், பாலாடை, பாதாம் பருப்பு இவற்றை நன்றாக நீர் விட்டாரைத்து இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து இதை முகத்தில் பூசி ஒருமணி நேரம் வைத்திருந்து கழுவினால், முகம் பளிங்கு போல் இருக்கும்.
அவரை இலைச் சாற்றுடன் அன்னாசிப் பழச்சாற்றை கலந்து முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ முகம் பளிச்சென்று இருக்கும்.
கடலை மாவு, பயத்த மாவு இவற்றுடன் குங்குமாதி தைலம் கலந்து பயன்படுத்தினால் சரும வெடிப்புகள் நீங்கும்.
ஆப்பிள் பேஸ்டை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பு தன்மை அடையும். ஆப்பிள் நீரை அரை டம்ளர் குளிக்கும் நீருடன் கலந்து குளித்தால் சருமம் மென்மையாகும்.