ஆஸ்திரேலியாவில் கடும் புயல்: கடுமையான சேதம், மின்தடையால் மக்கள் அவதி
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஆகஸ்ட் 25ஆம் திகதி இரவு கடும் புயல் வீசியதால், ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி காலை நேர நிலவரப்படி, அம்மாநிலத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 2,800 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின்சாரமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் இணையச் சேவைகளும் செயலிழந்து போய் விட்டன.
விக்டோரியா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதாகவும் அதையடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதாக 471 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாநில நெருக்கடி நிலைச் சேவை அமைப்பு தெரிவித்தது.
அந்த அழைப்புகளில், 261 சாய்ந்து விழுந்த மரங்கள் தொடர்பானவை, 130 கட்டட சேதம் மற்றும் 39 வெள்ளம் மற்றும் சொத்துச் சேதம் தொடர்பானவை என்றும் அந்த அமைப்பு கூறியது.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னுக்கு, ஆகஸ்ட் 25ஆம் திகதி இரவு கடுமையான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சேதம் விளைவிக்கும் காற்று, பெரிய ஆலங்கட்டி மழை, கனமழை ஆகியவை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய நேரப்படி ஆகஸ்ட் 25, மாலை 6.15 மணிக்கு புயல் மெல்பர்ன் நகரைத் தாக்கியதால் மெல்பர்ன் விமான நிலையத்தில் 100 கி. மீ. வேகத்திலான காற்று பதிவாகியுள்ளது. மாநிலத்தின் மற்ற இடங்களில் கிட்டத்தட்ட 150 கி. மீ. வேகத்தில் காற்று வீசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.