ட்ரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் 8 பாலஸ்தீனர்களை பொது இடத்தில் சுட்டுக்கொன்ற ஹமாஸ்
ஆயுதங்களை கைவிட ட்ரம்ப் எச்சரித்த நிலையில், பொதுவெளியில் 8 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ஆம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஹமாஸ் இன்னும் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,” நான் ஹமாசிடம் பேசினேன். அப்போது நீங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நாங்கள் ஆயுதங்களை கைவிடப் போகிறோம் என்று சொன்னார்கள்.
மேலும் அவர்கள் ஆயுதங்களை கைவிடவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம். அது விரைவாகவும் வன்முறையாகவும் நடக்கும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இதுபற்றி ஹமாசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள பிணைக்கைதிகளின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ஆம் கட்டம் தொடங்குகிறது” என்றார்.
இந்த நிலையில் காசாவில் 8 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் அமைப்பினர் தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டி பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அவர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.





