அமெரிக்காவில் H-1B விசா நடைமுறையில் இறுக்கம்! வெளிநாட்டவர்களை அழைக்க தயங்கும் நிறுவனங்கள்
அமெரிக்காவில் கடுமையாகியுள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்த பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுக்கமான H-1B விசா கொள்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில், H-1B விசாவுக்கான அனுசரணை (Sponsorship) கட்டணத்தை அரசாங்கம் சுமார் 100,000 டொலராக அதிகரித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு காரணமாக, இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்துவதை அமெரிக்க நிறுவனங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, H-1B விசா அனுசரணைகளுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகளின் சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளதாகப் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, கணினி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், விசா கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





