காசாவில் பெரும் அவலம் – மயானங்களுக்குள் உயிருடன் வாழும் மக்கள் – வெளியான அதிர்ச்சித் தகவல்
																																		இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசாவில், மயானங்களில் மக்கள் தங்கியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசாவில் கடுமையான தாக்குதல்களால் கட்டடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கியிருக்க போதுமான வசதிகள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
அமுலிலுள்ள காசா – இஸ்ரேல் போர் நிறுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பாலஸ்தீன மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். எனினும் அவர்களின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மயானங்களில் கொட்டகைகளை அமைத்து வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கான் யூனிஸ் பகுதியில், கடந்த 5 மாதங்களாகக் கல்லறைகளுக்கு மத்தியில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எலும்புக்கூடுகளே உறவுகளாக மாறியுள்ளன.
இரவு வேளையில் மயானப்பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளமையினால், பிள்ளைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மயானங்களை ஹமாஸ் அமைப்பு பாதுகாப்பு கேடயமாகப் பயன்படுத்தியதாகவும், அவர்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாப் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. சடலங்களை முறையாகப் புதைக்க இடமின்றி, மருத்துவமனை வளாகங்கள் உட்பட ஆங்காங்கே மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன. தமது உறவினர்கள் புதைக்கப்பட்ட பகுதிகளையும் மக்கள் தேடி வருகின்றனர்.
தற்போதுள்ள அமைதிக் காலப்பகுதியில் தமது பகுதிகளை மறுசீரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
        



                        
                            
