கூகுளின் அதிரடி திட்டம் – AI தொழில்நுட்பத்தை சேர்க்க நடவடிக்கை
கூகுள் நிறுவனம் தன்னுடைய தேடுபொறி அம்சத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சேர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இதை முதற்கட்டமாக சோதனை ஓட்டமாக செய்து பார்க்க உள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த அம்சத்தின் மூலம் கூகுளில் எதை நாம் தேடும்போதும், ஜெனரேட்டிவ் AI பயன்படுத்தி பதிலளிக்கும் வசதி வழங்கப்படும். முதற்கட்டமாக இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வழங்கப்படுகிறது. கூகுளின் அறிக்கையின்படி, நீங்கள் இதைப் பயன்படுத்துவது மூலம், நினைத்துப் பார்க்க முடியாத வகையான பதில்கள் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் சர்ச் பொது மேலாளர் புனிஷ் குமார் கூறுகையில், “ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த சில மாதங்களுக்கு கூகுள் நிறுவனம் தன்னுடைய பயனர்களின் அனுபவங்கள் பற்றிய கருத்துகளை சேகரிக்கும். கூகுள் குரோம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டில், ஆய்வகங்கள் பகுதிக்கு சென்று இந்த அம்சத்தை ஒருவர் பயன்படுத்த முடியும். இதற்காக உங்கள் சாதனம் சமீபத்திய அப்டேட்டாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.
கூகுள் சர்ச்சைப் பொறுத்தவரை பயணங்களை பிளான் செய்வது அல்லது ஒரு பொருளை வாங்குவது போன்ற பலவிதமான தேடுதல்கள் சார்ந்து கேள்விகள் அதிகமாக உள்ளன. பொதுவாக பல வித்தியாசமான கேள்விகள் பயன்படுத்தி ஒரு விஷயத்தை தேட வேண்டி இருக்கிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் காரணமாக, எளிதாக ஒரு ஒருங்கிணைந்த விரிவான தகவலை பயனர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
உதாரணத்திற்கு தற்போது எந்த வகை ஷர்ட் ட்ரெண்டிங்கில் உள்ளது என நீங்கள் தேடினால், இன்டர்நெட் அதன் முடிவுகளை அழிப்பதற்கு முன், சிறப்பான ஷர்ட்டுகள் தொடர்பான முடிவுகளை புகைப்படங்கள் வாயிலாக இந்த அம்சம் உங்களுக்குத் தரும். இதைத்தொடர்ந்து பல கேள்விகளையும் கேட்கலாம். அதற்கு ஏற்றவாறு விரைவான பதில்கள் உங்களுக்குக் கிடைக்கும். தேடும்போது வரும் முடிவுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மாற்றிக் கொள்ளலாம்.
ஒருவேளை அந்த பதிலில் விளம்பரங்கள் இருந்தால், இது விளம்பரம் எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். இந்த அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் இணையத்தில் ஏதாவது பொருட்களை வாங்க விரும்பினால் எளிதாக அந்த தளத்திற்குள் செல்ல முடியும்.