ஆயுதங்கள், கண்காணிப்புக்கு AI-ஐப் பயன்படுத்த மாட்டோம்; உறுதிமொழியை கைவிட்ட கூகிள்
ஆயுதங்களுக்கும் கண்காணிப்புக்கும் ‘ஏஐ’ அதாவது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாது என்று முன்னதாகக் கூறியிருந்த கூகல், பிப்ரவரி 4ஆம் திகதி அதன் கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாகப் பதவியேற்ற விழாவுக்கு கூகல் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உட்பட பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் சென்றிருந்ததை அடுத்து இப்புதிய ஏஐ கொள்கைகள் வெளியிடப்பட்டன.
ஏஎஃப்பி செய்தி நிறுவனம் இந்த மாற்றம் குறித்து கேட்டதற்கு, நிறுவனத்தின் ஏஐ கொள்கைகளை சுந்தர் பிச்சை 2018ஆம் ஆண்டு முதன்முதலில் வரையறுத்துக் கூறியபோது இதுபோன்ற வாக்குறுதிகள் ஏதும் அதில் இடம்பெறவில்லை என்று கூகல் பேச்சாளர் தெரிவித்தார்.
“ஏஐ மேம்பாட்டை ஜனநாயகம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதை நாங்கள் நம்புகிறோம். சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகளை மதித்தல் போன்ற அடிப்படை பண்புகள் அதற்கு வழிகாட்டும்,” என்று கூறும் புதிய கொள்கை வலைப்பதிவை கூகல் ‘டீப்மைன்ட்’ தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், ஆய்வுகூட மூத்த துணைத் தலைவர் ஜேம்ஸ் மான்யிகா ஆகிய இருவரும் வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய பண்புகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள், அரசாங்கங்கள், அமைப்புகள் ஆகியவை ஒன்றிணைந்து மக்களைப் பாதுகாக்கும், அனைத்துலக வளர்ச்சியை ஊக்குவிக்கும், தேசிய பாதுகாப்பை ஆதரிக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க வேண்டும் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.
மக்களுக்கு ஊறு விளைவிக்கும் அல்லது அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கத்திற்கு மாறாகத் தகவல்களைச் சேகரித்து அல்லது பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு நிறுவனம் ஒருபோதும் செயற்கை நுண்ணறிவை வடிவமைக்காது; பயன்படுத்தாது என்று முன்னதாக சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.
கூகல் பிப்ரவரி 4ஆம் திகதி பகிர்ந்த புதிய ஏஐ கொள்கைகளில் அந்தக் கூற்று இடம்பெறவில்லை.