சிறுமி சாரா கொலை வழக்கு :பாகிஸ்தானில் இருந்து லண்டன் பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பு

சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி தொடர்பில், பொலிஸார் வெளியிட்ட புதிய தகவலில், சிறுமியின் இறப்பு குறித்து பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ம் திகதி சர்ரே பொலிஸார் முன்னெடுத்த சோதனையில், குடியிருப்பு ஒன்றில் இருந்து 10 வயது சிறுமி சாரா ஷெரீப் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், தொடர்புடைய தகவலை பாகிஸ்தானில் இருந்து சிறுமியின் தந்தையே லண்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னரே சர்ரே பொலிஸார் தொடர்புடைய முகவரிக்கு சென்று குடியிருப்பில் சோதனை முன்னெடுத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை உர்ஃபான் ஷெரீப், அவரது துணைவி பெய்னாஷ் படூல் மற்றும் உர்ஃபானின் சகோதரர் பைசல் மாலிக் ஆகியோரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த மூவரும் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமி தொடர்பில் பாகிஸ்தானில் இருந்து உர்ஃபான் ஷெரீப் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிறுமி சாராவின் மரணம் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 9ம் திகதி உர்ஃபான் ஷெரீப் உட்பட மூவர் இஸ்லாமாபாத்திற்குச் சென்றதாக நம்பப்படுகிறது.இவர்களுடன் ஒரு வயது முதல் 13 வயது வரையிலான ஐந்து குழந்தைகளும் பயணம் செய்தனர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக சர்ரே பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் புதிய சிக்கலாக, இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறையான ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லை எனவும், கோரிக்கை முன்வைக்கும் அடிப்படையில் முன்னர் பலர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கை சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருவதாகவும் சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.