காசா போர் தாக்குதல்; முன்னாள் இந்திய ராணுவ வீரர் பலி
இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நடந்த தாக்குதல் ஒன்றில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஏழு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் ஓயாது என்பதை இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. ரஃபாவில் அதிகளவில் பொதுமக்கள் வசிப்பதால் அங்குத் தாக்குதலை ஆரம்பித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா தொடங்கி பல்வேறு உலக நாடுகளும் எச்சரித்துள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதலை நடத்துவதில் உறுதியாக உள்ளது. ஏற்கனவே ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள், இதற்கிடையே ஐநா சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் ஏற்பட்டதில் இருந்து சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும். உயிரிழந்த அந்த நபரின் பெயர் உள்ளிட்ட இதர தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.. இருப்பினும் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடங்கிய நிலையில், கடந்த 7 மாதங்களில் முதல்முறையாகச் சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது பணியாளர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பணியாளர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தி உள்ளது.