நாட்டை மீட்க முழு ஆதரவு: அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி!
“ டித்வா சூறாவளியை சாதாரணமான விடயமாகக் கருதக்கூடாது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) வலியுறுத்தினார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தவேளையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,
“ பொறுப்பற்ற – கேலிக்கையான பார்வைகளால் தான், சுனாமியிலிருந்து கூட எம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால்தான் இன்றளவிலும் “ டாப்ளர் ரேடார்” அமைப்புகளை நிறுவிக் கொள்ள முடியாமல்போயுள்ளது.
அன்று நாம் பாடம் கற்று – உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் டித்வா புயல் போன்ற அனர்த்தங்களால் ஏற்படும் தாக்கங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் முகமாக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடுக்கு நாம் ஆதரவளித்தோம்.
எனவே இந்த நிவாரணங்களை உடனடியாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதன்மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நடந்தால் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் முழுமையான ஆதரவு வழங்கப்படும்.” என்றார் சஜித் பிரேமதாச.





