பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பதவி விலகினார்!

பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரான்சுவா பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு பதவியேற்ற அவர் 26 நாட்களுக்குள் மேற்படி முடிவெடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஆட்சியின் கீழ் நியமிக்கப்பட்ட மூன்று பிரதமர்கள் குறுகிய கால இடைவெளியில் பதவியை இராஜினாமா செய்திருப்பது அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரான்ஸில் கடந்த 2024 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.8% இருந்தது, கடன் 113% ஆக இருந்தது. இவை இரண்டும் ஐரோப்பிய ஒன்றிய விதிகளை விட 3% அதிகமாக இருந்தது.
இந்நிலையில் வரவு செலவு திட்டத்தில் பல சீர்த்திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. அத்துடன் சமூக நல உதவிகளை முடக்குதல் மற்றும் செலவை குறைக்கும் சிக்கனமான திட்டங்களை முந்தைய அரசு பரிந்துரைத்திருந்தது. அதனையே லெகோர்னுவும் தொடர உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.