நியூ கலிடோனியாவில் தொடரும் பதற்றம்: நால்வர் பலி: 200 இற்கும் மேற்பட்டவர்கள் கைது

பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவில் கடந்த பல வாரங்களாகவே வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
பிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
ஊரடங்கு உத்தரவு
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் உயர்ஸ்தானிகலாயம் செவ்வாய்க்கிழமை நியூ கலிடோனியாவில் தலைநகர் நௌமியாவில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
இந்த வன்முறை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நியூ கலிடோனியா. பிரான்சில் இருந்து 17,000 கி.மீ. தூரத்தில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இப்பகுதி மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கு நியூ கலிடோனியாவின் பழங்குடியினரான கனாக் இன மக்கள், ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் சந்ததியினரும் அதிகம் வசிக்கின்றனர்.
கலவரத்தின் பின்னணி
இந்நிலையில், பிரான்சில் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. நியூ கலிடோனியாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்களை மாகாணத் தேர்தலில் வாக்களிக்க இந்த சட்டம் அனுமதிக்கிறது.
இந்த சட்டத்திற்கு சில உள்ளூர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த புதிய சட்டம் உள்ளூர் கனாக் வாக்குகளை நீர்த்துப்போகச் செய்யும் என்று அஞ்சுகின்றனர். கனக் மக்கள் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், நியூ கலிடோனியா முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த சட்டத்தால் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி, கனக் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
பொலிஸார் அதிரடி நடவடிக்கை
பிரெஞ்சு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டதால், பல நகரங்கள் போர்க்களமாக காட்சியளித்தன. பிரெஞ்சு பேருந்துகள் மற்றும் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். அவர்களை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் கனக் பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களுக்கு தடை
வன்முறையைத் தொடர்ந்து போராட்டங்களைக் கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் நௌமியாவில் பொதுமக்கள் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை 12 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்க, டிக்டாக் செயலியை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
நியூ கலிடோனியாவில் உள்ள 2 விமான நிலையங்களும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. போராட்டத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்சிலிருந்து அதிகளவில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நியூ கலிடோனியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
“நியூ கலிடோனியாவில் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது, கொள்ளை, கலவரங்கள், தீ, தாக்குதல்கள் தாங்க முடியாதவை” என்று பிரதமர் கேப்ரியல் அட்டல் செய்தியாளர்களிடம் கூறினார்.