குரங்கு முக பூ உள்ளடங்க தாய்லாந்தில் நான்கு புதிய தாவர வகைகள் கண்டுபிடிப்பு
தாய்லாந்தில் நான்கு புதிய தாவர வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்று மைக்ரோசிரிட்டா சிமியா செடியாகும். இச்செடியில் பூக்கும் மலர்கள் குரங்கு முக வடிவத்தைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து வனப்பகுதி தொடர்பான இதழில் (தாவரவியல்) இந்தக் கண்டுபிடிப்புகள் தொடர்பாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அது அக்டோபர் மாதம் 8ஆம் திகதியன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புத்துறையின் தலைமை இயக்குநர் அத்தாபோல் சாரோன்சான்சா கூறினார்.
அந்த நான்கு புதிய தாவரங்களும் சாராபுரி, ராயோங், லோப்புரி ஆகிய இடங்களில் உள்ள சுண்ணாம்புக்கல் மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய வகை செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அத்தாபோல் கூறினார்.
அந்த நான்கு வகை செடிகளும் மைக்ரோசிரிட்டா தாவர வகையைச் சேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மைக்கோசிரிட்டா தாவர வகையில் பெரும்பாலானவை தாய்லாந்தில் வளர்வதாக அத்தாபோல் கூறினார்.