லிந்துலையில் 24 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா
லிந்துலை ஹோல்றீம் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கான 24 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலிக கொட்டகைகளில் வசித்து வந்த குடும்பங்களுக்காக இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், தலா 32 இலட்சம் ரூபாய் செலவில் 10 பேர்ச்சஸ் காணிப் பரப்பில் ஒவ்வொரு வீடும் அமையவுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரைக்கு அமைய, இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை மற்றும் அடிப்படை வசதிகளுடன் இவை நிர்மாணிக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயனாளிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





