ஆஸ்திரேலியாவில் ஆற்றுப் பாறைகளில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி; கால் துண்டித்து மீட்பு
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் உள்ள ஃபிராங்கிளின் ஆற்றில் படகு வலித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணியின் கால், இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நபரை மீட்க மீட்புப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 20 மணி நேரம் போராடினர்.
அந்த நபர் இரவு முழுவதும் ஆற்றில் இருந்தார்.அவருடன் மருத்துவக் குழுவும் இருந்தது.
அவரது காலைப் பாறைகளிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.கடைசியாக, வேறு வழியின்றி, சிறப்புச் சாதனத்தைப் பயன்படுத்தி அவரது காலை மருத்துவக் குழு துண்டித்தது.
அதை அடுத்து, அந்த நபர் ஹெலிகாப்டர் மூலம் ஹோபார்ட் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.அந்த நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
நவம்பர் 22ஆம் திகதியன்று ஃபிராங்கிளின் ஆற்றில் சுற்றுப்பயணிகள் கும்பலாகப் படகு வலித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இச்சம்பவம் நிகழ்ந்தது.