கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் – கனேடிய பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடைய கனேடிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு வந்து, அங்கிருந்து நேற்று இரவு 8.30 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-936 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அவர்கள் அவர் வந்த விமானத்திற்குச் சென்று கைது செய்தனர்.
36 கிலோகிராம் 500 கிராம் எடையுள்ள இந்த ஹஷிஷ் போதைப்பொருள், அவர் கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டு, பல போர்வைகளில் சுற்றப்பட்டு, 72 பொதிகளாக 12 காற்று புகாத பொலிதீன் பொதிகளில் சுற்றப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த ஹஷிஷ் போதைப்பொருள் வேறு நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்காக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.