தமிழ்த் திரையுலகிற்கு பெரிய இழப்பு
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராசி தங்கதுரை (வயது53). மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்பட விருது பெற்ற படங்களுக்கு வசனங்கள் எழுதி பிரபலமானார்.
இந்த நிலையில் இதய நோய் காரணமாக ராசி தங்கதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ராசி பிரியன், சுகதேவ் திலிபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆண்டிப்பட்டியில் உள்ள சொந்த கிராமத்தில் நடக்கிறது.
பள்ளி படிப்பை மட்டுமே முடித்த ராசி தங்கதுரை இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தில் சிறு வயதிலேயே கதை, கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் கொண்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள் எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் இடம் பெற்ற இவரது கதை களங்களும், வசனங்களும் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இவரது வசனத்தில் வெளியான தேன் படமும் விருதுகளை பெற்றுள்ளது.
கெவி, தாக்கல், ஆதாரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிப்புரிந்துள்ள ராசி தங்கதுரை பெயரிடப்படாத 4 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.