தைவானில் போர் விமான இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட பெண் ராணுவ அதிகாரி மரணம்
தைவானில் போர் விமானம் ஒன்றின் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட 41 வயது தைவானிய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
தைசுங்கில் உள்ள சிங் சுவான் காங் விமானப்படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை (21) இச்சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
சார்ஜண்ட் ஹு எனும் அந்தப் பெண் அதிகாரி, அந்தப் போர் விமானத்தைச் சோதித்துக்கொண்டு இருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பிடிஎஸ் நியூஸ் ஊடகம் கூறியது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்தப் பெண் இறந்துவிட்டதாக முற்பகல் 11.40 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட போர் விமானங்களின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள விமானப்படைத் தளம், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தைவானிய விமானப்படை, இறந்தவரின் குடும்பத்தாருக்கு உதவி வருகிறது. விமானப்படை அதன் வேலை நடைமுறையை மறுஆய்வு செய்யும்.
சார்ஜண்ட் ஹு போர் விமானத்தைச் சோதித்தபோது சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்திருக்கலாம் என ராணுவ நிபுணர்கள் கருதினர்.இதனிடையே, உறுதிப்படுத்தப்படாத அல்லது ஊகத் தகவலைப் பரப்ப வேண்டாம் என விமானப்படைத் தளபத்தியம் கேட்டுக்கொண்டுள்ளது.