திருகோணமலை-மொரவெவ பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை இன்மையால் அவதியுறும் விவசாயிகள்!
திருகோணமலை-மொரவெவ பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை இன்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பெரும் போக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடன் பட்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போதிலும் நிர்ணய விலைக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஏக்கர் வயல் வெட்டுவதற்காக 15000/= ரூபாய் செலவு செய்ய வேண்டியதாகவும் ஒரு கிலோ நெல்லின் விலை 80 ரூபாய் ஆக வெளி மாவட்ட வியாபாரிகள் பெற்றுக் கொள்வதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெல் களஞ்சியசாலை இல்லாமையினால் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மொரவெவ பிரதேசத்துக்குரிய நெல் களஞ்சியசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.