இந்திய இராணுவம் குறித்த பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் போலியான செய்திகள்

இந்திய இராணுவ அதிகாரிகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்குநாள் விரிசலடைந்து போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் முக்கிய ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து அவர்களைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.
இந்திய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநரான துணைநிலை ஜெனரல் டி.எஸ். ரானா பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்தமான் நிகோபாரிலுள்ள காலாபானி சிறைச்சாலைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளைப் பரப்பியுள்ளன.
ஆனால், இராணுவ அதிகாரியான டி.எஸ்.ரானா அந்தமான் நிகோபாரின் முப்படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.
இதேபோல், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ராணுவ உயர் அதிகாரியான எம்.வி.சுசீந்திர குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பின.
இத்துடன், பாகிஸ்தான் மீது போர்த் தாக்குதல் நடத்த மறுத்ததினால், விமானப்படை துணைத் தலைவர், ஏர் மார்ஷல் எஸ்.பி. தர்கர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறி அந்நாட்டைச் சேர்ந்த சில சமூக ஊடகக் கணக்குகளில் போலியான செய்திகள் வெளியாகின.
இத்தகைய, போலியான செய்திகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஏனெனில், இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழலைச் சமாளிக்க இந்தியா தயாராக இல்லை எனும் பிம்பத்தை உருவாக்கவே இவ்வாறு பாகிஸ்தான் ஊடகங்கள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.