‘தீவிரவாதிகளுக்கு ட்விட்டரில் இடமில்லை’ – எலான் மஸ்க்கின் அதிரடி உத்தரவு!
ட்விட்டரில் ஹமாஸ் ஆதரவாளர்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவோர் கணக்குகளை நீக்கியும், முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
‘தீவிரவாதிகளுக்கு எக்ஸ் தளத்தில் இடமில்லை’ என்ற அறிவிப்போடு இந்த நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பாக எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ, “இது போன்ற முக்கியமான தருணங்களில், எக்ஸ் தளத்தில் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கத்தையும் நீக்க உறுதி பூண்டுள்ளோம். பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத குழுக்களை ஆதரிப்போருக்கு எக்ஸ் தளத்தில் இடமில்லை” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தொடர்பாக ட்விட்டரில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் தொழில்துறை தலைவர் தியரி பிரெட்டன் விடுத்த பகிரங்க கோரிக்கைக்கு எலான் மஸ்க் செவி சாய்த்துள்ளார்.
ஹமாஸ் குழுவினரின் நேரடி கணக்குகள் என்ற சந்தேகத்துக்கு உரியவை, ஹமாஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் புதிதாக தொடங்கப்பட்ட டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்க உறுதி பூண்டுள்ளது. இவற்றின் கீழும் சமூக ஊடகங்களின் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் கூடியுள்ளது.