மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து – 18 தொழிலாளர்கள் பலி!
இந்திய மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்புக்குப் பிறகு சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத சுரங்கம் மாநில தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
இருப்பினும், இந்த சுரங்கத்தை இயக்கியவர்களை இந்திய காவல்துறை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கவனத்தை ஈர்த்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி, இறந்தவர்களுக்கு 2 லட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 இந்திய ரூபாயும் நிதி உதவி வழங்குவதாக இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்.




