ஐந்து வருடத்தில் 17 பில்லியன் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி!
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் ஐந்து வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி மொத்த வெளிநாட்டு கடன்களான 41.5 பில்லியன் டொலர்களில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் உள்ளுர் கடன்களை மறுசீரமைப்பதால் நாட்டின் வங்கி முறையில் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு வங்கி அமைப்பில் உள்ள வைப்புத்தொகையை பாதிக்காது என்றும் தற்போது செலுத்தப்படும் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டியை பாதிக்காது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
அதேபோல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதி (ETF), ஆகியவையும், ஓய்வூதியமும் பாதிக்கப்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.