தித்வா புயல் கரையை கடந்தாலும் “அரசியல் புயல் ஓயவில்லை”!
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன், இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் நிறுவப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,
“அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்தும் அது பற்றி அலட்சியமாக இருந்துள்ளனரா? இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற கருத்து நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.
எனவேதான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும். அப்போது இது பற்றி மேலதிக தகவல்களை வெளியிடுவோம்.
அரசாங்க அதிகாரிகள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைக்காமல் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த முற்பட்டால் பாதிப்புதான் ஏற்படும். எமது ஆட்சியில் அரசாங்க நிர்வாகப் பொறிமுறை வலுவாக இருந்தது.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.





