மத்திய கிழக்கு பதற்றம்: வளைகுடா விமானங்கள் பாதிப்பு – ஐரோப்பா விமானப் போக்குவரத்து சீர்குலைவு
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் நிலைமை காரணமாக, வளைகுடா விமான நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் தாக்கமாக, ஐரோப்பாவின் நீண்ட தூர விமானப் போக்குவரத்திலும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக துபாய் (Dubai), தோஹா (Doha), அபுதாபி (Abu Dhabi) போன்ற முக்கிய விமான மையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், ஆசியாவிற்கான பயணங்களில் ஐரோப்பா வளைகுடா விமான நிறுவனங்களை அதிகமாக சார்ந்திருப்பது வெளிப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சிக்கலில் உள்ளனர்.
குறிப்பாக எமிரேட்ஸ் (Emirates), கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways), எதிஹாட் (Etihad Airways) போன்ற நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையை ஏர் பிரான்ஸ்–கேஎல்எம் (Air France–KLM) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் ஸ்மித் (Benjamin Smith) “எச்சரிக்கை மணி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐரோப்பாவிற்கு சேவை செய்யும் 100 விமானங்கள் உட்பட, மொத்தம் 600 விமானங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லுஃப்தான்சா (Lufthansa) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ஸ்டன் ஸ்போர் (Carsten Spohr), சில ஆசிய வழித்தடங்களில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பா தனது விமான வழித்தடங்களின் கட்டுப்பாட்டை இழந்து வருவதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், வளைகுடா நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க, ஐரோப்பிய விமான நிறுவனங்கள் ஐரோப்பா–ஆசியா நேரடி விமான சேவைகளை அதிகரிக்க முயற்சித்து வருகின்றன.





