டொனால்ட் ட்ரம்பிற்கு டென்மார்க் பிரதமர் கடும் எச்சரிக்கை
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளை வர்த்தக வரி மூலம் மிரட்டிப் பணியவைக்க முடியாது என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட டென்மார்க்கின் கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் 8 நட்பு நாடுகள் மீது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீத வரியும், ஜூன் மாதம் முதல் அதனை 25 சதவீதமாகவும் உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டலானது அட்லாண்டிக் கடந்த உறவுகளைச் சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான செயல் என டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என ட்ரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என அந்நாட்டு மக்களும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.
அங்கு ‘சர்வதேச ஒத்துழைப்பு’ குறித்து ட்ரம்ப் உரையாற்றவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது ‘மிரட்டல் எதிர்ப்பு சட்டத்தை’ (Anti-coercion instrument) அவருக்கு எதிராகப் பயன்படுத்தத் தயாராகி வருவதால், உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது.





