மெர்கோசர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் பச்சைக்கொடி
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தூதர்கள் பெய்ஜிங்கில் இன்று கூடிய கூட்டத்தில், தென் அமெரிக்காவின் மெர்கோசர் (Mercosur) வர்த்தகக் கூட்டமைப்புடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
பிரான்ஸ், அயர்லாந்து, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும், தகுதிவாய்ந்த பெரும்பான்மை (Qualified Majority) கிடைத்ததால் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, ஐரோப்பாவிற்குச் சலுகை விலையில் தென் அமெரிக்க இறைச்சி மற்றும் விவசாயப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதுடன், ஐரோப்பிய இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கான லத்தீன் அமெரிக்கச் சந்தை விரிவடையும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனக்கூறி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) எதிர்வரும் திங்கட்கிழமை பரகுவேயில் (Paraguay) இந்த ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





