எப்ஸ்டீனின் ஆவணக் கோப்புக்கள் – 188 முறை இலங்கையின் பெயர்
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) ஆவணக் கோப்புகளில் இலங்கையின் பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.
அமெரிக்க நீதித் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.
இந்த ஆவணக் காப்பகத்தில் உள்ள மின்னஞ்சல்கள், பயண விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கான குறிப்புகளை ஆய்வு செய்ததில், இலங்கை தொடர்பான பெயர்கள் பல இடங்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இவை எப்ஸ்டீனின் குற்றச் செயல்களுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, தனிநபர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம், தங்குமிட விபரங்கள், நேர வலயங்கள் மற்றும் கல்விசார் தகவல்கள் தொடர்பான பொதுவான உரையாடல்களிலேயே இலங்கையின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், தாங்கள் இலங்கையில் இருந்ததாக அல்லது இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக சாதாரணமாகக் குறிப்பிட்டிருக்கும் தகவல்களே இதில் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது .





