மனித ரோபோவை அறிமுகம் செய்கிறார் எலான் மஸ்க்!
டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவைஅறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆப்டிமஸ் ஜென் 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. தயங்கி நடந்து வந்த ஆப்டிமஸ் இப்போது விறுவிறுவென நடக்கும் காணொளி பலரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. முட்டை ஒன்றினை மிருதுவாகக் கையாளும் திறனையும் அந்தக் காணொளியில் காண முடிகிறது.
டெஸ்லா பாட் என மக்களால் அழைக்கப்படும் இந்த ஆப்டிமஸ் ரோபோ, வெகுநாட்களுக்கு மக்களிடையே எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. அதற்கு காரணம் 2022ல் அரையும் குறையுமாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த ரோபோவின் வடிவமைப்புதான். முழுதாக வடிவமைக்கப்படாத அந்த அறிமுகம், மக்களிடையே பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இணையத்தில் கேளிப் பொருளாக வலம் வந்தது.
Optimuspic.twitter.com/nbRohLQ7RH
— Elon Musk (@elonmusk) December 13, 2023
இப்போது வெளியிட்டுள்ள இந்தக் காணொளியில் அனைத்து கிண்டல்களையும் விமர்சனங்களையும் வாயடைக்கச் செய்துள்ளது டெஸ்லா. எலான் மஸ்க் தனது ரோபோ தொழில்நுட்பம் முழுமையாக வெற்றியடைந்த பின்னர், மனிதர்கள் செய்ய விரும்பாத எல்லா வேலைகளையும் இந்த ரோபோ திறப்பட செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டெஸ்லாவின் மூத்த மென்பொருள் பொறியாளர் அந்தக் காணொளியில் எந்த வீடியோ எப்எக்ஸ் (VFX)-ம் பயன்படுத்தப் படவில்லை. ஆப்டிமஸ் செய்யும் அனைத்தும் உண்மையில் டெஸ்லா கண்ட முன்னேற்றமே என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஜெமினி செய்யறிவு தொழில்நுட்ப காணொளியில் வீடியோ எப்எக்ஸ் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
காணொளியின் இறுதியில் ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோ நடமாடுவது அனைவர் மனதிலும் டெஸ்லா ரோபோ மீதான நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது.