இலங்கை தொழிலாளர்களின் வேலை நேரத்தை 16 மணிநேரமாக்க முயற்சி!
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கையாக உழைக்கும் மக்களின் உரிமைகளை உத்தேச புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் இல்லாதொழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த புதிய சட்டத்தின் மூலம் இதுவரை உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13 சட்டங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற பொருளாதார நெருக்கடியின் போது உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கடமை எனக் குறிப்பிட்ட அவர், வீட்டுக் கடன் மறுசீரமைப்பு, ‘அஸ்வெசுமா’ நலத்திட்டம் மற்றும் இப்போது புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் அரசாங்கம் மக்களைச் சுமைப்படுத்தியுள்ளது எனவும் விமர்சித்தார்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் 8 மணி நேர வேலையை ரத்து செய்து அதற்கு பதிலாக 12 மணி நேர வேலையை அறிமுகப்படுத்த முன்மொழிகின்றன என்றும், ஊழியரின் ஒப்புதலின் பேரில் அதை 16 மணிநேரமாக நீட்டிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வாரம் 8 மணி நேர வேலை என்பது பல உயிர்களைப் பலிகொடுத்த உலகளாவிய போராட்டத்திற்குப் பிறகு அடையப்பட்ட உரிமை. அதை ஒழிப்பது உழைக்கும் மக்களுக்குப் பெரும் அடியாகும்,எனவும் அவர் கூறினார்.
புதிய சட்டங்களில் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம், ஊதிய வாரியங்கள் ஆணைச்சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்கள் நீக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டங்கள் உழைக்கும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உத்தேச சட்டமூலத்தை திரும்பப் பெற்று உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.