பொருளாதாரப் பேரழிவு உறுதி! வரியை இரத்து செய்தால் நாடு அழியும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
கடுமையான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திப்பதுடன், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்கள் மீது தம்முடைய அரசு விதித்த கூடுதல் வரி விதிப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கூடுதல் வரி விதிப்பால் நாட்டின் வளர்ச்சி மேம்பாடு அடைந்து வருவதாகவும், கூடுதல் வரி வருவாய் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, கூடுதல் வரிக் கொள்கையை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தால், இதுவரை வசூலித்த கூடுதல் வரிகளை அந்தந்த நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பித் தரவேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கூடுதல் வரி விதிப்புக் கொள்கை அமல்படுத்தப்பட்டது முதல், அமெரிக்காவுக்கு இதுவரை 101.62 பில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக அமெரிக்க திறைசேரி துறை தெரிவித்துள்ளது.





