முடி வளர்ச்சியை அதிகரிக்கும் இலகுவான வழிமுறை

இன்றைய இளைஞர்களின் பெரும் கவலையாக முடி உதிர்வு பிரச்சனை உருவெடுத்து இருக்கிறது. குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரும் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் சத்துக் குறைபாடு என்று பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, எந்த காரணத்தினால் முடி உதிர்வு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அதனை சரி செய்யலாம்.
இது தவிர முடியை சரியாக பராமரிக்கவில்லை என்றாலும், அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும். முடி பராமரிப்பு என்றதும் விலை உயர்ந்த ஷாம்புக்கள் அல்லது ஹேர் ஆயில் போன்றவற்றை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஹேர்பேக் தயாரிக்கலாம்.
இதற்காக கெட்டியான தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்க்காத சாதம் வடித்த கஞ்சி ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, நம் தலை முடிக்கு தேவையான அளவு செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலைகள் ஆகிய இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.
இவை இரண்டையும் முதலில் கலந்து வைத்திருந்த தேங்காய் பால், சாதம் வடித்த கஞ்சியும் சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஹோம்மேட் ஹேர்பேக் தயாராகி விடும். இதனை நம் தலை முடியில் நன்றாக தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நம்முடைய தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
வீட்டிலேயே தயாரிக்கும் ஹேர்பேக்குகளில் இரசாயனங்கள் சேர்க்காததால், அதில் இருந்து ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது.